Pages

Sunday, 10 May 2015

கெய்ர்ன் இந்தியா வரி விவகாரம் அந்நிய முதலீடுகளைப் பாதிக்குமா?


தெளிவற்ற வரி விதிப்புக் கொள்கைதான் நமது அந்நிய முதலீடுகளை பாதிக்கும் காரணி என்பது அரசியல்வாதிக்கும் தெரியும், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்கு அந்நிய முதலீடுகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.


அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் இங்கு தொழில் தொடங்குவதற்கான சூழல் எளிதாக இருக்க வேண்டும். அந்நிய முதலீட்டா ளர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது இங்கு நிலவும் வரி விதிப்பு முறைதான்.


வோடபோன் விவகாரம் பூதாகரமாக கிளம்பி அடங்கியுள்ள வேளையில் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு முறையும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. இவை இரண்டுமே வெளிநாட்டு நிறுவனங் களாகும். தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்த பிறகும் எண்ணெய், எரிவாயு அகழ்வில் அந்நிய முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டில் இத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன.


அப்போது இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி எனும் எடின்பர்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்காட்லாந்து நிறுவனம்.. இந்நிறுவனம் ஓஎன்ஜிசியுடன் இணைந்து ஆந்திர மாநிலம் ராவா எனுமிடத்திலும், குஜராத்தில் காம்பே வளைகுடாப் பகுதியிலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ளது.


2005-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட அகழ்வில்தான் அதிகப்படியான கச்சா எண்ணெய் கிடைத்தது. இன்றளவும் கிடைத்து வருகிறது. 2006-ம் ஆண்டில் இந்நிறுவனம் இந்திய நிறுவனத்தை தனியாக உருவாக்கத் திட்டமிட்டது. இதன்படி உருவாக்கப்பட்டதுதான் கெய்ர்ன் இந்தியா நிறுவனமாகும்.


இதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கான பங்குகள் ஒதுக் கப்பட்டு அது தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி துணை நிறுவனமாக இருந்த கெய்ர்ன் நிறுவனத்தை கெய்ர்ன் இந்தியா நிறுவனமாக தனியாக உருவாக்கியது.


இதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனம் பங்குத் தொகைகளை கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சிக்கு வழங்கியது. இத்தகைய பங்கு பரிமாற்றத்தில் மூன்றாவது நிறுவனம் ஏதும் கிடையாது. இதற்கு 2006-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


வோடபோன் விவகாரம் கிளம்பி யவுடன் முன் தேதியிட்டு வரி விதிக்கலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தாலும் வோடபோனைத் தொடர்ந்து கெய்ர்ன் நிறுவனம் மீது வரி செலுத்த வேண்டும் என்று வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.


தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சிக்கு மூலதன ஆதாயம் பரிமாற்றம் செய்ததில் அடைந்த ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. 2014-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் ரூ. 10 ஆயிரம் கோடி வரியும் அதற்கு வட்டியாக ரூ. 10 ஆயிரம் கோடி ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது ஒரு வழக்கும், கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி மீது ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது.


தாய் நிறுவனத்துக்கு பங்குத் தொகை அளித்தபோது அதற்குரிய வரியை பிடித்து (டிடிஎஸ்) செலுத்தத் தவறியது ஏன் என்று கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீதும், இந்திய நிறுவனம் மூலம் அடைந்த ஆதாயத்துக்கு வரி செலுத்தாதது ஏன் என்று கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கெய்ர்ன் பிஎல்சி நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியுள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து இடையே வரி விதிப்பு ஒப்பந்தம் உள்ளது என்றும். அந்த வகையில் இந்தியாவில் மேற்கொள் ளப்படும் முதலீடுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. 100 சதவீத அந்நிய முதலீடுகளை அனுமதித்த வேளையில் தேவையான போது 100 சதவீதம் விலகிக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.


இதனால் தாய் நிறுவனத்துக்கு அளித்த பங்குத் தொகைக்கு வரி பிடித்தம் செய்யவில்லை என்று கெய்ர்ன் இந்தியா நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறை தொடராது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்.


ஆனால் முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கொண்டு வந்த முன் தேதியிட்டு வரி விதிக்கும் சட்ட மசோதா கைவிடப்படவில்லை. இதனாலேயே இவ்விரு நிறுவனங்களும் செய்வதறியாமல் திகைக்கின்றன.


தெளிவற்ற வரி விதிப்புக் கொள்கைதான் நமது அந்நிய முதலீடுகளை பாதிக்கும் காரணி என்பது அரசியல் வாதிக்கும் தெரியும், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தியாவில் முதலீடு செய்த கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சட்ட பிரச்சினை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை தொடரும் பட்சத்தில் அந்நிய முதலீடு வருமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து நீடிக்கும் வரி சர்ச்சை




சமீப காலமாக பங்குச்சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக குறைந்த பட்ச மாற்று வரி (எம்ஏடி) இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஊசலாட்டத்துக்கு இதுதான் காரணம்.


சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் குறைந்த பட்ச வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீக்குவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.


இந்த நிலையில் இதற்கு முந்தைய ஆண்டுகளில், (அதாவது எம்ஏடி இருந்த காலத்தில்) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம் வரி செலுத்த சொல்லி வருமான வரித்துறை பலருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தொகை சுமார் 40,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இந்தியா வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் அல்ல, இது சட்டபூர்வமானது இதில் விலக்கு ஏதும் கொடுக்க முடியாது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். சட்டபூர்வமாக வரி வசூல் செய்வது வரித் தீவிரவாதம் ஆகாது என்றார்.


சில நாட்கள் கழித்து இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட (டிடீஏஏ) நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவை இல்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏதாவது ஒரு நாட்டில் வரி செலுத்தி இருந்தால் போதுமானது, இந்தியாவில் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா 88 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை போட்டுள்ளது. மொரீஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இதில் விலக்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும்.


இந்திய பங்குச்சந்தையில் 20 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு உள்ளது. மொத்த அந்நிய முதலீட்டில் அமெரிக்காவில் இருந்து 32 சதவீதமும், மொரீஷியஸில் இருந்து 22 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு வருகிறது.


ஒப்பந்தம் இருக்கும் நாடுகளுக்கு வரி விலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், சமீபத்தில் 602 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

68 நபர்கள்/நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மக்கள வையில் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்.


40,000 கோடி ரூபாயிலிருந்து 600 கோடி ரூபாய் அளவுக்கு சுருங்கிவிட்டது. அதை விட தெளிவான கொள்கை இல்லை என்று மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் ஒன்றையும் செயலாளர் வேறு ஒன்றையும் தெரிவிக்கிறார்கள்.


இதே பிரச்சினைதான் முந்தைய காங்கிரஸ் அரசிலும் இருந்தது என்றார். இதுவரை பிஜேபி அரசு பேசுவதை தவிர வேறு எதையும் செய்ய வில்லை என்று சர்வதேச ஹெட்ஜ் பண்ட் மேனேஜர் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருக்கிறார்.
நடக்கும் நிகழ்வுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன!

ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் பணத்துக்கு பங்கமா?



ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக சொல்வதற்குப் பதிலாக ஒரு பயனாளிக்கு நடந்த சம்பவம் அதன் உண்மை தன்மையை உணர்த்தலாம்.


சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மாதவன். கடந்த ஆண்டு ஒரு வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். வழக்கு விவரம் அந்த நிறுவனத்தின் வாஷிங்மெஷின் வாங்கியதுடன், அவர்களிடமே ஆண்டு பராமரிப்பு பணிக்காக பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துள்ளார்.


ஆனால் ஒப்பந்த காலத்தில் வாஷிங் மெஷினில் ஏற்பட்ட பழுது தொடர்பாக அவர் போன் மூலம் தகவல் தெரிவித்தும் நிறுவனத்தினர் வாஷிங் மெஷினை சரி செய்து தரவில்லை. அந்த நிறுவனத்தின் இணைய தளம் வாயிலாக புகார் அளித்த பிறகு நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் புகார் தொடர்பாக விசாரித்து விட்டுச் சென்றுவிட்டனராம். அவர்களும் பழுதை சரி செய்து தரவில்லை.


கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்த நடவடிக் கையும் நிறுவனம் மேற்கொள்ள வில்லை எனவே அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடும் கோரி யிருந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு என்றும், ஆனால் அதை கடைப்பிடிக்காமல் வாடிக்கையாளரை நிறுவனம் அலைக் கழிப்பு செய்து, சேவை குறைபாடு செய்துள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு இழப்பீடாக ரூ.2,500, ஆண்டு பராமரிப்புக்காக பெற்ற தொகை மற்றும், வழக்கு செலவாக ரூ.1,000 என மொத்தம் ரூ.7,154-யை திருப்பி தரவேண்டும் என்று உத்தரவிட்டது.



இந்தக் கதை எங்களுக்கு எதுக்கு என்கிறீர்களா...


ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களில் அலைக்கழிக்கப்பட்ட அனுபவங்கள் நமக்கும் இருக்கும்தான். ஆனால் இந்த நுகர்வோரைப்போல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நாம் முற்படுவதில்லை அவ்வளவுதான்.


வீட்டு உபயோகப்பொருள் என்றில்லை, வீடு வாங்கினால்கூட பராமரிப்பு ஒப்பந்தம் போடத்தான் செய்கிறோம். ஆனால் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டுள்ளபடி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது சேவையை அளிக்கிறார்களா என்றால் நம்மால் திருப்திகரமான பதில் சொல்ல முடியவில்லை. ஒப்பந்த காலத்துக்குள் என்னதான் சேவை கிடைக்கும் என்பதில் தெளிவான வரையறைகளை சொல்வதில்லை ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள்.


எனது நண்பர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு ஏசி வாங்கினார். ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தமும் சம்பந்தப்பட்ட நிறுவனத் திடமே ஏற்படுத்திக் கொண்டார். கடந்த ஆண்டு எந்த சிக்கலும் கிடையாது. இந்த ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பித்துக் கொண்டார்.

தற்போது கோடைக்காலம் தொடங்கியதும் பயன்பாடு அதிகமாக ஏசியிலிருந்து நீர் ஒழுக ஆரம்பித்துள்ளது. இதை சரிசெய்து தருமாறு அவர்களிடம் புகார் அளித்துள்ளார். வந்து பார்த்தவர்கள் உதிரிபாகம் மாற்ற வேண்டும் என்று அதற்கு ஒரு தொகையை சொல்லியிருக்கிறார்கள்.



ஏசியை வாங்கி இரண்டு வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அதன் மதிப்பில் 20 சதவீத தொகைக்குமேல் பராமரிப்பு கட்டணமாக கொடுத்திருக்கிறார். இப்போது தனியாக உதிரிபாக செலவும் சேர்ந்திருக்கிறது. ஒன்றரை ஆண்டுக்குள் பொருளின் விலையில் கால்வாசி பணத்தை செலவழிக்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் மனசு வரும்? அப்புறம் எதற்கு இந்த ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம்?


சேவை உண்மைதான்


இது தொடர்பாக சென்னையில் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு பிறகான சேவையில் ஈடுபடும் நிறுவனத்தினருடன் பேசினோம். ஆண்டு பராமரிப்பு கட்டணத்தில் எல்லா சேவைகளையும் அளித்துவிட முடியாது. பழுதில்லாமல் இயங்குவதற்கான அடிப்படை பராமரிப்புகளை மட்டுமே செய்து கொடுப்போம்.


இரண்டாவது உதிரிபாகங்களுக்கான விலை என்பது நிலையில்லாதது. எனவேதான் அந்த சேவையை சேர்த்துக் கொள்வதில்லை. அவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பத்தான் செய்து கொடுக்கிறோம் என்றனர். தவிர பராமரிப்பு விஷயங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது. முறையாக செய்து கொடுத்தால்தான் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதால் அனைத்து நிறுவனங்களுமே இதில் தெளிவாக இருக்கின்றன என்றனர்.



அனுபவங்கள் பலவிதம்


ஆனால் பயனாளிகளின் அனுப வங்கள் அப்படியில்லை. இது தொடர்பாக இந்த ஒப்பந்தங்களில் பாதிக்கப்பட்ட சிலரோடு பேசினோம். இந்த ஒப்பந்தம் தேவையா தேவையில்லையா என்பது தெரியாமல்தான் இதற்கு பணம் கட்டினோம்,கட்டுகிறோம். என்றைக் காவது ஒருநாள் வருவார்கள். முக்கிய மான பழுதுகளையும் பார்ப்பதில்லை என்றனர்.


சிலரோ ஒரு வருடம் பணம் கட்டியதும், அதற்கு பிறகு அடுத்தடுத்த வருடங்களில் கட்டுவதை விட்டு விடுகிறோம் என்றனர்.


நிறுவனத்துக்கே லாபம்


நாம் சேகரித்த விவரங்கள்படி தெரிந்து கொண்டது என்னவென்றால் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களில் பலனடைவது என்னவோ நிறுவனங்கள்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். வாடிக் கையாளர்கள் ஒப்பந்தத்தைப் படித்துப் பார்ப்பது கிடையாது என்பதை யெல்லாம் தாண்டி, இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு அலைந்து கொண்டு அல்லது நேரத்தை செலவிட்டுக் கொண்டு என்கிற மனநிலைக்கு வந்துவிடு கின்றனர். இதுதான் நிறுவனங்களில் லாபம் என்கின்றனர்.


வாடிக்கையாளர் பிரிப்பு


சில நிறுவனங்கள் இந்த ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் போடுவதற்கு வாடிக்கையாளர்களை தனித்தனி வகையாக தரம் பிரித்து விடுகின்றனர். பிளாட்டினம், பிரீமியம், சாதாரணம் என்று வகைப்படுத்தி விடுகின்றனர்.


சாதாரண பிரிவில் உள்ள வாடிக்கையாளர் கூடுதலாக சேவையை எதிர்பார்க்கிறபோது பிரீமியம் அல்லது பிளாட்டினம் வாடிக்கையாளராக மாறுங்கள் அப்போதுதான் சேவை கிடைக்கும் என்று பிரித்து விடுகின்றன. ஆனால் கொடுக்கிற சேவையில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

உதிரிபாகங்கள் போய்விட்டது என்றால் மாற்றிக்கொடுப்பார்கள் அவ்வளவுதான். இப்படி ஒரு பிளானிலிருந்து இன்னொரு பிளானுக்கு மாற இரண்டு மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.



நிறுவன வாடிக்கையாளர்கள்


சேவைத்துறை என்பது தனியாக வளர்ந்து வரும் தொழில் என்பதால் பெரும் நிறுவனங்களுக்கான சேவை களும் இந்த விதமாக மேற்கொள்ளப் படுகின்றன. கணினி, மின் சாதனங்கள், ஜெனெரேட்டர், குளிர் சாதனங்கள் போன்றவற்றைப் பராமரிக்க தனியாக பணியாளர்களை நியமித்துக் கொள்வ தில்லை. இப்படியான பராமரிப்பு ஒப்பந் தங்கள் மூலமாக மேற்கொள்வது வளர்ந்து வருகிறது.


வாரண்டி காலம்


வாரண்டி காலத்துக்குள் என்றால்தான் கட்டணம் கட்டுபடியாகும் . உதாரணமாக ஒரு ஏசி வாங்கிய முதல் ஆண்டுக் குள் என்றால் 1 டன் ஸ்பிளிட் ஏசிக்கு ரூ. 3,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. வாரண்டி காலம் முடிந்தது என்றால் ரூ. 4,000 வரை எகிறிவிடும். இது ஆண்டு கணக்கிற்கு ஏற்ப அதிகரிக்கும். ஆனால் முதல் ஆண்டில் என்ன சேவை கிடைக்கிறதோ அதே சேவைதான் அடுத்தடுத்த ஆண்டும் கிடைக்கும்.


பணத்துக்கு பங்கமா?


ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் என்பது நமது பணத்துக்கு பங்கம் வைக்கிறது என்பதுதான் பெருவாரியான அனுபவஸ்தர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் சின்னச் சின்ன பழுதுகளுக்கு நமது நேரத்தை ஒதுக்கிக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக அதற்கு கொடுக்கும் விலையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். பொருள் மதிப்பா? பண மதிப்பா? நேரமா? அலைச்சலா? என்பதை பொறுத்து ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தங்களை முடிவு செய்வது நல்லது.

வறுமை: சில புள்ளிவிவரங்கள்!


 


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு உயரும் என்று பன்னாட்டு அமைப்புகள் கூறினாலும் இந்தியாவில் இன்னமும் 30 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மில்லீனியம் ஆண்டு மேம்பாட்டு திட்ட இலக்கின்படி இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையே சுட்டிக் காட்டியுள்ளது. 


$ கல்வி, அடிப்படை சுகாதாரம், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எதுவுமே இவர்களுக்குக் கிடைக்கவில்லை. 


$ 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பது நெஞ்சு பதபதைக்க வைக்கும் செய்தியாகும். 


$ பாலின சமத்துவம், மகளிர்க்கு அதிகாரம், சிசு மரணக் குறைப்பு, திருமண வயதை அதிகரிப்பது, ஹெய்ஐவி மற்றும் எட்ய்ஸ் நோயைக் 
கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடு ஆகிய இலக்குகளைக் கொண்டதாக இந்த செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. 


$ 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்ட மில்லீனியம் மேம்பாட்டு இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது. 


$ மக்களின் வறுமைக்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன. புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களும், பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களும் வறுமையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


$ காடுகள், மலைகள், பனி படர்ந்த பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வறுமையில் தவிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 


$ விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்கூட விவசாயத் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதுதான் மிகவும் கொடுமையான விஷயம்.


$ நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்களில் அதிகமானோர் வறுமையில் வாடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


$ தரிசு நிலம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் வறுமை வாடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 


$ தகவல் தொடர்பு வசதியற்ற, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகள் மற்றும் மாறுபட்ட தட்ப, வெப்ப நிலை நிலவும் பகுதிகளில் வசிப்பவர்களும் வறுமையின் பிடியிலிருந்து தப்பவில்லை. 


முதல் செலவு: திட்டமிடுதல் கஷ்டமில்லை



இயற்பியலில் நியூட்டனின் மூன்று விதிகளில் மூன்றாவது விதி (வினை/எதிர்வினை பற்றியது) ரொம்பவும் புகழ் பெற்றது. ஆனால் முதலீடு, நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை இவ்விதிகளில் மூன்றாவதை விட முதலாவது விதியே முக்கியமானது. அது ஒரு ரொம்ப எளிமையான விதி - ஒரு ஆரம்ப உந்து சக்தி இல்லாவிட்டால் எந்த ஒரு பொருளும் இருக்கும் இடத்திலேயே இருக்கும் என்பதுதான் அந்த விதி. இதை 'செயலின்மை' (inertia) விதி என்று சொல்வார்கள். 



முட்டுக்கட்டை 

 
இதற்கும் முதலீடுகளுக்கும் என்ன சம்பந்தம்? முதலீடுகள் செய்ய முனைபவர்களில் பெரும்பான்மை யினரை ஆட்கொண்டிருப்பது இந்த செயலின்மைதான். குறிப்பாக, நீண்டகால அடிப்படையில் செய்ய வேண்டிய முதலீடுகள் என்றால் 


‘அதெல்லாம் சும்மா செய்ய முடியாது, திட்டமிட்டுச் செய்ய வேண்டிய விஷயம்' என்று ஒரு முட்டுக்கட்டை உருவாகிவிடும். இந்த திட்டமிடுதலைச் செய்வதற்கு நேரமும் வாய்க்காது, அதில்லாமல் முதலீடுகள் செய்யவும் தயக்கம் இருக்கும். இதனால், நியூட்டனின் அசையாத பொருட்களைப் போல நமது முதலீட்டுத் திட்டம் துவங்கப்படாமலேயே தேங்கி நிற்கும். 


எளிய முறைகள் போதும் 

 
திட்டமிடுதல் என்பது முக்கியம்தான், மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரே வீச்சில் நமது வாழ்க்கையையே ஒரு வரைபடமாக்கி முழுமையாக தீர்மானித்துக் கொண்ட பிறகுதான் முதலீடுகளைத் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. சில எளிய முறைகளைப் பயன்படுத்தினால் போதும், சுலபமாக ஒரு தோராயமான திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் முதலீடுகளைத் தொடங்கலாம். பின்னர், கொஞ்சம் நமது திட்டங்களில் ஒரு முழுமையைக் கொண்டு வந்து கொள்ளலாம். 



நிதிவளம் பெருக… 

 
இப்படிச் செய்வதை ஏன் பரிந் துரைக்கிறேன் என்றால், முதலீடுகளைத் துவங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தத்தான். நீண்ட கால முதலீடுகள் என்பது காலத்தே துவங்கப்பட வேண்டிய ஒன்று. எவ்வளவு விரைவில் துவங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. நமது ஆரம்ப முதலீட்டுப் பணமே மிக அதிக அளவில் நமது நிறைவான நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது. 


சரி, ஆரம்பிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எளிமையான திட்டத்தினை வகுத்துக் கொள்வது எவ்வாறு? இதற்கான சில எளிய முறைகள் என்னென்ன? 


குறிக்கோள் அவசியம் 

 
இதற்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் குறிக்கோளுடன் முதலீடு செய்வது. நம்மில் பெரும்பான் மையானவர்கள் நிதி வள முதலீடு என்பதை ஒரு மேம்போக்காக மட்டுமே செய்கிறோம். கையில் கொஞ்சம் சேமிப்பு அல்லது மீள்தொகை இருக் கிறது என்றால் அதை ஒரு வங்கி வைப்பு நிதியில்
‘போட்டு வைக்கலாமே' என்ற அளவில்தான் யோசிக்கிறோம். அல்லது கடைசி நிமிடத்தில் வரிச் சலுகைக்காக சில முதலீடுகளைச் செய்கிறோம். 


இப்படிச் செய்வதில் 2 குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்று, நமது முதலீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும். இதனால் நமது நிதி வள மேலாண்மையை சரிவரச் செய்ய முடியாது. இரண்டாவது குறை பாடு, எதற்காக எந்த முதலீட்டைச் செய்கிறோம் என்ற ஒரு தீர்மானம் இல்லாமல் இருக்கும். அதனால், நமது முதலீடுகளில் ஒரு ஒழுக்கமின்மை மிக விரைவில் உருவாகி விடும். 


தீர்மானித்தல் அவசியம் 

 
நாம் எதற்கு எந்த முதலீட்டினைச் செய்கிறோம் என்பதைத் தீர்மானித்த பின் முதலீடு செய்வதே இதற்கு மாற்று. அதற்கு முன் நாம் நமக்கென சில நிதிசார் குறிக்கோள்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இவை நீண்ட கால குறிக்கோள்களாக இருத்தல் நல்லது. 


நாம் அனைவருக்குமே நிதிசார் குறிக்கோள்கள் இருக்கத்தான் செய் கின்றன. குடும்பங்களை நிர்வகிக்கும் பலருக்கும் குழந்தைகளின் எதிர்காலம், மேற்கல்வி போன்ற செலவுகளுக்குப் பணம் தேவைப்படும். நாம் அனைவருமே ஒரு நாள் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறோம். அதன் பின்னர் வாழ்க் கையை குறைவின்றி நடத்துவதற்கான வருமானத்திற்கு வழி தேவை. சிலருக்கு சீக்கிரமே ஒரு வீடு வாங்கலாம் என்றும், அதற்குத் தேவையான முன்பணம் செலுத்துவதற்கு ஒரு தொகையும் தேவைப்படும். 


நமது எளிமையான நிதித் திட்டம் என்பது முதலில் இத்தகைய குறிக் கோள்களில்தாம் ஆரம்பிக்கின்றது. நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நமக்குத் தெரிந்த நம் வாழ்க்கையின் நிதிசார் குறிக்கோள்களைப் பட்டிய லிடுவதுதான். ஒவ்வொன் றையும் சென்றடைவதற்கு எத்தனை காலம் இருக்கிறது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், இந்தக் குறிக்கோளுக்கு இவ்வளவு பணம் தேவைப்படும் என்று (மிக) உத்தேசமாகத் தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது. அப்படித் தெரியாவிட்டாலும் பாதகமில்லை. குறிக்கோள்களை அடையாளப்படுத்தி இவற்றிற்காக முதலீடு செய்யப் போகிறோம் என்று தீர்மானம் செய்து கொண்டால் போதும். 


குறுகிய காலத்திற்கு சில குறிக்கோள்கள் இருந்தாலும் சரி, அவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கார் வாங்க வேண்டும், அதற்கு ஒரு இரண்டு லட்ச ரூபாய் (முன்பணம்) தேவைப்படுகிறதென்றால், அதுவும் ஒரு நிதிசார் குறிக்கோளே. நீண்ட காலத் தேவைகளுக்கு மட்டுமே திட்டமிட வேண்டும் என்பதில்லை. 


இதையெல்லாம் எதற்காகச் செய் கிறோம் என்றால், இந்தப் பட்டியலை உருவாக்கிய பிறகு நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும், இவற்றில் ஒன்றுக்காக செய்வதாக நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது காரணமற்ற முதலீடுகள் என்பதை அறவே செய்யக்கூடாது. 


முதலீடுகளைத் துவங்குவதற்கு இந்த முதல் அடிகள் போதுமானவை. குறிக்கோள்களையும், அவற்றிற்கான கால அளவையும் நிர்ணயித்தல், பின்னர் முதலீடுகளை அக்குறிக்கோள்களில் ஏதேனும் ஒன்றுக்கென ஒதுக்கீடு செய்தல் - இவ்விரண்டையும் செய்தால் நாம் ஒரு திட்டமிட்ட முறையில் நமது முதலீடுகளைத் துவங்கி விட்டோம், நடத்துகிறோம் என்று முறையாகி விடும். 


கட்டுரையின் ஆரம்பத்தில் நியூட்ட னின் முதல் விதி பற்றிச் சொன்னேன் அல்லவா? அந்த விதியில் ஒரு பாதியைத் தான் சொன்னேன். அதற்கு இன்னொரு பாதி இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு விசை கொடுக்கப்பட்டு நகர ஆரம்பித்த ஒரு பொருள் ஒரு தடுக்கும் விசை வரும் வரையில் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். 



திட்டமிட்டுச் செயல்படும் முதலீடு களும் இப்படித்தான். நீங்கள் இந்த எளிய முறையைப் பயன்படுத்தித் தொடங்கி விட்டீர்களேயானால், நீங்கள் போட்ட திட்டம் நாளுக்கு நாள் சீரும் செழுமையும் அடையக் காண்பீர்கள். உங்கள் நிதி வளமும் பெருகக் காண்பீர்கள்...

துணிவே தொழில்: இலக்கை எட்ட எது தேவை?


 

ஒரு வெற்றியாளராக உருவாக நமக்கு லட்சியமும் இலக்கும் இருந்தால் போதுமா? இவை இருந்தாலே வெற்றி வசப்படுமா என்று கேட்போர் பலர் உண்டு. இவை இரண்டும் இருப்போருக்கு அடுத்த கட்ட தேவைதான் திட்டமிடுதல். எந்த ஒரு வேலையையும் திட்டமிடுவது முக்கியம். 


அதேபோல தொழில் தொடங்குவோருக்கு திட்டமிடுதல் மிக மிக அவசியம்.
திட்டமிடுதல் என்றால் என்ன? ஒரு பணியை நிறைவேற்ற வேண்டும் என்றால் நமக்கு அதற்குரிய ஆள் பலமும், இலக்கை எட்டுவதற்கான கால அவகாசமும் தேவைப்படும். 



உதாரணத்துக்கு நீங்கள் தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருமா னம் ரூ. 50 லட்சம் என வைத்துக் கொள் வோம். நடப்பு நிதிஆண்டில் உங்கள் நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அதையே இலக்கா கவும் வைக்கிறீர்கள். ஆனால் இலக்கை வைத்தால் மட்டும் போதாது. 



 
நீங்கள் நிர்ணயித்த காலம் ஓராண்டு. வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும். இத்தகைய இலக்கை எட்டுவதற்கு Smart Goal என்பர். ஸ்மார்ட் என்றால் என்ன தெரியுமா? S for specific, M for Measurable, A for Achievable, R for Realistic and T for Time bound.


மேலாண்மைக் கல்வி மையங்களில் பெரும்பாலும் ஸ்மார்ட் கோல் என்பதைத் தான் பெரிதும் சொல்லித் தருவார்கள். 


இதன்படி 10 மடங்கு வருமானம் ஈட்ட வேண்டும் என தெளிவாக முடிவு செய்துள்ளது specific ஆகும். அடுத்தது measurable என்பது எவ்வளவு காலத்தில் அதை அடைவது என்பதை தீர்மானிப் பதாகும். சென்னையிலிருந்து கோவைக்கு 10 மணி நேர ரயில் பயணம் என்றால் அந்த ரயில் சரியான வேகத்தில் எவ்வித இடையூறுமின்றி (கிராசிங்) இல்லாமல், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்க வேண்டிய நேரத்தில் நின்று, புறப்பட வேண்டிய சமயத்தில் சரியாக புறப்பட்டுச் சென்றால் மட்டுமே 10 மணி நேரத்தில் கோவையைச் சென்றடையும். அதைப் போல இலக்கை எட்டுவதற்கு எத்தனை காலம் ஆகும், அதை எவ்விதம் அடையலாம் என்பதை அளவீடு செய்ய வேண்டும். 



நிறுவனங்களின் வளர்ச்சியை ஒவ் வொரு காலாண்டிலும் மதிப்பீடு செய்வர். அதன்படி முதல் காலாண்டில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான வளர்ச்சி, அடுத்த காலாண்டு, மூன்றாம் காலாண்டு மற்றும் நான்காம் காலாண்டில் இலக்கை எட்டுவது என தீர்மானித்து செயல்பட வேண்டும்.
நிறுவனங்களின் வளர்ச்சியை அளவீடு செய்வதன் மூலம் குறிக்கோள் மற்றும் இலக்கை எட்ட முடியுமா? என்பதைப் பார்க்கலாம். இவ்விதம் அளவீடு செய்யா விடில் இலக்கை எட்டுவது சாத்தியமாகாது. 



உதாரணத்துக்கு நீங்கள் நடத்தும் தொழில் அனைத்து காலத்துக்கும் ஏற்றதா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமானதா அதாவது சீசனல் தொழிலா என்று பார்க்க வேண்டும். நீங்கள் குடை வியாபாரம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மழைக் காலத்தில் குடை வியாபாரம் அமோகமாக இருக்கும். கோடைக் காலத்தில் சற்று பரவாயில்லை போலிருக்கும். 



எஞ்சிய காலங்களில் வர்த்தகம் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அப்படியெனில் எந்த காலகட்டத்தில் உங்கள் இலக்கு அதிகமாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். மழைக் காலத்தில் மட்டும் இப்போது ரூ. 50 லட்சம் உள்ள வர்த்தகத்தை ரூ. 5 கோடியாக உயர்த்த முடியுமா? என்று பார்க்க வேண்டும். 



அடுத்தது Achievable, அதாவது நீங்கள் நிர்ணயித்த இலக்கு எட்டக் கூடியதுதானா? என்று ஒரு முறைக்கு பல தடவை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ரூ. 50 லட்சமாக உள்ள உங்கள் வருமானம் 10 மடங்கு உயர வேண்டுமெனில் ஓராண்டில் உங்கள் வருமானம் ரூ. 5 கோடியாக உயர வேண்டும். இந்த அளவுக்கு உங்கள் தொழிலின் வர்த்தக வாய்ப்பு உள்ளதா? இப்போதைய சூழலில் இது சாத்தியமா என்று ஆராய வேண்டும். 


உங்களது தொழில் எல்லை சென்னை மற்றும் அதைச் சுற்றித்தான் உள்ளது. புதிய இலக்கை எட்ட வேண்டுமெனில் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். Realistic இதுதான் நடைமுறை சாத்தியம். நிர்ணயித்துள்ள இலக்கை எட்ட தற்போது நம்மிடம் உள்ள 10 ஊழியர்களின் துணையோடு எட்ட முடியுமா? என்று ஆராய வேண்டும். 


அடுத்தது timebound அதாவது கால வரையறைக்குட்பட்டது. 12 மாதத்திற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என நிர்ணயிப்பதுதான் அது. இலக்கை எட்டும் சிறிய மைல் கல்லாக இருப்பதுதான் Smart. 


இத்தகைய இலக்கை நிர்ணயிப்பதே Goal Setting.

Saturday, 9 May 2015

உன்னால் முடியும்: தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது!

உன்னால் முடியும்: தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது!

 

 

 

ராப்ட் செயலியின் நிறுவனர்கள்: (இடமிருந்து). சித்தார்த், கிருஷ்ணா மற்றும் அகிலேஷ்.

 

ராப்ட் செயலியின் நிறுவனர்கள்: (இடமிருந்து). சித்தார்த், கிருஷ்ணா மற்றும் அகிலேஷ். 

தொழில் தொடங்க பணம் தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும். முதலீடு செய்வதற்கு வென்ச்சர்/ஏஞ்சல் முதலீடுகள் தயாராக இருக்கின்றன என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு வணிக வீதியில் எழுதி இருந்தோம். அதற்கு உதாரணமாக ஐடியா மட்டுமே வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள் தொழில் தொடங்கி இருக்கிறார்கள். 


இவர்கள் உருவாக்கிய ஒரு செயலிக்கு (ஆப்) மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் எந்த பஸ்/ரயிலில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும் செயலிதான் இந்த ராப்ட் (Raft)
இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த்திடம் பேசினோம். 


இந்த செயலிக்கான ஐடியாவில் இருந்து நிதி திரட்டியது வரை பல விஷயங்களை கூறினார். சென்னை ஐஐடியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சென்னையில் டிராபிக் எப்படி இருக்கிறது என்பதை புராஜெக்ட்டாக எடுத்து செய்தோம். 


படித்து முடித்த பிறகு நாங்கள் மூன்று பேரும் மூன்று வருடம் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தோம். இருந்தாலும் கல்லூரி புராஜெக்டை அடிப்படையாக வைத்து தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மூவருக்கும் இருந்தது. 



தொழில் தொடங்க முடிவெடுத்த பிறகு ஐஐடியில் இருக்கும் பேராசிரியர்களிடம் எங்களுடைய ஐடியா, நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை விவரித்தோம். அதனால் அலுவலகம் தொடங்க இடமும் சிறிய முதலீடும் கிடைத்தது. அதன் பிறகு செயலி எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆரம்பித்தோம். 



உதாரணத்துக்கு பலவிதமான செயலிகள் வந்து மொபைல் போனின் மெமரியை பிடித்துக்கொள்வதால் தேவைப்பட்டால் மட்டுமே நம்முடைய செயலியை மக்கள் பயன்படுத்துவார்கள். அதனால் எங்களுடைய செயலி 3 எம்பி-க்கு கீழே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். 



மேலும் செயலிக்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்தோம். சென்னையில் 50 சதவீதத்துக்கு மேல் பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்கள் தான். எனவே பயணம் செய்பவர்களுக்கு இது தேவைப்படும் என்பதை முடிவு செய்தோம். மேலும் இதே மாடலை மற்ற ஊர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்த பிறகு மும்பையில் ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தை அணுகினோம். 



ஏஞ்சல் முதலீடு பெறுவது கஷ்டம்தான் என்றாலும் கொஞ்சம் மெனக்கெட்டால் முதலீடு கிடைத்துவிடும். ஒவ்வொரு நிறுவனமாக செல்வதை விட, முதலீட்டா ளர்களுக்கு சில துறைகள் பிடித்ததாக இருக்கும், அதுபோல உங்களது துறையை எந்த ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்துக்கு பிடிக்கும் என்பதை அறித்து கொண்டால் அதுவே பாதி வெற்றிதான். தேவை இல்லாமல் அலைய வேண்டியதில்லை. ஐந்து மாதங்களில் நாங்கள் முதலீட்டை பெற்றுவிட்டோம். 



சென்னையில் சிலரை நியமித்து, எந்த பஸ் எங்கு செல்கிறது என்கிற டேட்டாவை அடிப்படையாக வைத்து இந்த செயலியை உருவாக்கி விட்டோம். 1,500 வழித்தடங்களில் 6,000 நிறுத்தங்களின் டேட்டாவை வைத்து இந்த செயலியை உருவாக்கி இருக்கிறோம். 



இந்த செயல்பாடு எப்படி என்று எங்களுக்கு புரிந்து விட்டது. டேட்டாவை எப்படி கையாளுவது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம். இதே விஷயத்தை மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் நான்கு நகரங்களில் விரிவாக்கம் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். 



எங்கள் ஆப் எந்த பஸ் எங்கு செல்லும் என்கிற தகவலை கொடுக்கும். ஆனால் பஸ் எங்கு இருக்கிறது, எப்போது நிறுத்தத்துக்கு வரும் என்பதை கொடுப்பதுதான் இந்த செயலியின் அடுத்த கட்டம். 



இந்த செயலிக்கு விளம்பரம் எதுவும் செய்யவில்லை. நண்பர்கள், பேஸ்புக் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தினோம். 20,000 நபர்களால் டவுன் லோடு செய்யப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் எல்லாமே மொபைல்தான். மொபைல் மூலமான விற்பனை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் எங்களுக்கான இணையதளம் கூட தொடங்கவில்லை. 



ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என்பதால் முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே எங்களது செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது குறைவு என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் எங்கள் அப்ளிகேஷன் இல்லை. இந்தியாவில் தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் உருவாகி இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோம் என்று முடித்தார் சித்தார்த். 



தொழில் முனைவோருக்கு சாதகமான சூழல் என்பது சித்தார்த்துக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான்... 


ராப்ட் செயலியின் கூகுள் ப்ளே ஸ்டோர் இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=com.hm.raft&hl=en