பொதுவாக நிதி நிர்வாகம் பற்றி எழுதும் என்னைப் போன்றவர்கள் ஒரு
அணுகுமுறையைக் கையாள்கிறோம். முடிந்த வரை எந்த ஒரு விஷயமானாலும், 'இது
ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமில்லை, கொஞ்சம் புரிந்து கொண்டால் போதும்'
என்ற வகையில் விளக்க முற்படுகிறோம். நிதி நிர்வாகம் குறித்து வாசகர் மனதில்
இருக்கும், 'இது ஒரு கஷ்டமான விஷயம்' என்ற ஒரு அச்சத்தை விலக்கவே அவ்வாறு
எழுதுகிறோம்.
எளிமையானது
பெரும்பான்மையான விஷயங்களில் இது உண்மையும் கூட. நிதி நிர்வாகத்தின் அத்தனை
கூறுகளும் ஓரளவு கல்வியறிவு உள்ள யாராலும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்
தான். அந்த அடிப்படையில்தான் நான் இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எழுதிய
விஷயங்களை, 'உங்களால் முடியும் நண்பர்களே' என்ற தொனியில் எழுதி
வந்திருக்கிறேன்.
சென்ற சில வாரக் கட்டுரைகளில், பரஸ்பர நிதிகள் எப்படிச் செயல் படுகின்றன,
அவற்றின் வகைகள் என்ன, நன்மைகள் என்ன, அவற்றில் முதலீடு செய்ய நாம்
மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் திட்ட முறை என்ன என்றெல்லாம் பார்த்தோம்.
இவற்றிற்கெல்லாம் பிறகு, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம் என்று முடிவு
செய்து முன்வரும் ஒரு முதலீட்டாளர், எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்
என்று யோசிக்கும் போது எப்படி முடிவெடுக்க வேண்டும்? அது தான் இன்றைய
கட்டுரையின் களம்.
இக்கட்டுரையிலும், சென்ற வாரங்களைப் போல, 'இது ஒன்றும் பெரிய விஷயமில்லை,
சுலபமாக செய்து விடலாம்' என்ற வகையில் பிரஸ்தாபித்து எழுதலாம் என்றுதான்
ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், யோசித்துப் பார்த்தால் அது சரியில்லை என்று
தோன்றுகிறது.
கடினமா? சுலபமா?
இந்திய பரஸ்பர நிதிச் சந்தையில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட
நிதித்திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் பங்குச் சந்தை முதலீடுகளில்
ஈடுபடும் திட்டங்கள் மட்டுமே ஐநூற்றுக்கும் மேற்பட்டவை. மற்ற திட்டங்கள்
கடன் சந்தைத் திட்டங்கள் அல்லது கலப்புத் திட்டங்கள் அல்லது மற்ற (தங்கம்,
அயல்நாட்டுச் சந்தை போன்ற) திட்டங்கள். இவற்றிலிருந்து நமக்கேற்ற நல்ல
திட்டங்களைத் தேர்வு செய்வது என்பது இயலாத காரியமல்ல; ஆனால் சுலபமானதும்
இல்லை.
பலவித அளவீடுகள்
ஏனெனில், ஒரு நிதித்திட்டத்தை மதிப்பிட பல அளவுகோல்கள் உள்ளன. இவை ஒரு
திட்டத்தின் வகைமையைப் பொறுத்து மாறுபடவும் செய்யும். மிக எளிமையான
முறையில் கடந்த ஒன்று, மூன்று, ஐந்து வருடங்களில் எந்தத் திட்டங்கள் அதிக
லாபம் பெற்றுக் கொடுத்திருக்கின்றன என்று பார்த்து சட்டென்று தேர்வு செய்து
விட முடியாது.
அப்படிப்பட்ட திட்டங்கள் எந்த வகையான முதலீடுகள் செய்தன, எப்படிப்பட்ட
ரிஸ்க் எடுத்தன, இந்த நல்ல லாபம் என்பதை ஒரு காலகட்டத்தில் மட்டும் தந்தனவா
இல்லை நிலையாகத் தந்தனவா போன்ற பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து
அவற்றின் அடிப்படையில் தான் எவை நல்ல திட்டங்கள் என்று தேர்வு செய்ய
வேண்டும்.
வெவ்வேறு மதிப்பீட்டு முறை
மேலும் ஒவ்வொரு வகைத் திட்டத்திற்கும் வெவ்வேறு மதிப்பீட்டு முறைகள் உள்ளன.
கடன் சந்தை சார்ந்த திட்டமென்றால், எத்தகைய கால நீட்டத்திற்கான கடன்
பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்,
கலப்புத் திட்ட மென்றால், எப்பொழுது பங்கு வர்த்தக சதவிகிதத்தை
அதிகரிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேசத்
திட்டங்களுக்கு வேறு அளவு கோல்கள், துறை-சார்ந்த திட்டங்களுக்கு வேறு
மாதிரி இத்யாதி இத்யாதி.
மீண்டும் சொல்கிறேன் - இது சாத்தியமில்லை என்று சொல்ல வரவில்லை. சில
விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து, கொஞ்ச காலம் சில நிதித் திட்டங்களை
ஆராய்ந்து அவற்றின் கடந்த காலச் செயல்திறன்களை அலசிப் பார்த்தால், இது நல்ல
திட்டம், இது சுமாரான திட்டம் என்றெல்லாம் புரிந்து விடும். இதற்கான
நேரமும் முனைப்பும் இருப்பவர்கள் கட்டாயம் இம்முறையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். அப்படிச் செய்கையில் நமக்குக் கிடைக்கும் கல்வியும் அது தரும்
நம்பிக்கையும் மதிப்பிட முடியாதவை.
ஆலோசகரை நாடலாம்
ஆனால், அப்படிச் செய்ய முடியாத வர்கள் அல்லது தயங்குபவர்களுக்கும் ஒரு வழி
இருக்கிறது. அது ஒரு நிதி நிர்வாக ஆலோசகரை அணுகு வது. இப்படிப்பட்ட
விஷயங்களில் ஆலோ சனை வழங்குபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பலர் இருக்கிறார்கள்.
சில இணைய தளங்களும் இவ்வகை ஆலோ சனைகளை வழங்குகின்றன.
இவர்களில் சிலர் இந்தச் சேவையை ஒரு சிறு கட்டணம் பெற்றுக் கொண்டு
செய்கிறார்கள். பலர் கட்டணமின்றியே செய்கிறார்கள் - அவர்கள் மூலமாக நீங்கள்
முதலீடு செய்யும் போது நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு ஒரு சேவைக் கட்டணத்தை
வழங்குகிறது. ஆதலால், உங்களிடமிருந்து பணம் எதுவும் பெறாமலேயே அவர்களால்
இந்தப் பணியைச் செய்ய முடிகிறது.
இணையதளம் மூலம்…
உங்களுக்கு உதவக் கூடிய ஆலோசகர் யார் என்பதை நீங்கள் பரஸ்பர நிதி
ஆலோசகர்களைப் பட்டியலிடும் ஆம்ஃபி இந்தியா இணைய தளத்தில் சென்று
கண்டடையலாம் (www.amfiindia.com). அல்லது இணைய சேவைத் தளங்களையும் கூகுளில்
தேடிக் கண்டு பிடிக்கலாம்.
யாரை தேர்வு செய்வது?
உங்களுக்கான ஒரு நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதில் சற்று கவனமாக இருக்க
வேண்டும். பொதுவாக பரஸ்பர நிதிகளை பரிந்துரைப்பதை விட காப்பீட்டு
முதலீடுகளைப் பரிந்துரைப்பதில் ஒரு ஆலோசகருக்கு வருமானம் அதிகம் உண்டு.
ஆனால் அத்தகைய காப்பீட்டு முதலீடுகள் பலவும் நீண்ட காலத் திட்டங்களுக்கு
உகந்தவை அல்ல. ஆகையால், பரஸ்பர நிதிகளைத் தேர்வு செய்து பரிந்துரைக்கும்
ஆலோசகர்களை மட்டுமே நாடவும்.
அப்படிப்பட்ட ஆலோசகர்கள் உங்களிடம் முதலில் உங்கள் தேவைகள் என்ன, உங்கள்
முதலீட்டுக் கால நீட்டம் என்ன என்பதைக் கண்டறிந்து பின்னர் அவற்றிற்கேற்ப
நல்ல திட்டங்களைப் பரிந்துரைப்பார்கள். இவை இரண்டுமே முக்கியம். ஏனெனில்,
சரியான வகைத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் உங்கள் ரிஸ்க்
அதிகமாகும், அல்லது சரியான லாபம் கிடைக்காது.
சரியான வகைகளில், நல்ல திட்டங்களைத் தேர்ந்தெடுக்காவிடில், உங்கள்
முதலுக்கே மோசமாகி விடக்கூடும். ஆகையால், நல்ல ஆலோசகரை நாடி, நேர்த்தியான
வரைமுறை செய்து, சரியான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதே
சிறப்பான முறை.
No comments:
Post a Comment