இயற்பியலில் நியூட்டனின் மூன்று விதிகளில் மூன்றாவது விதி (வினை/எதிர்வினை
பற்றியது) ரொம்பவும் புகழ் பெற்றது. ஆனால் முதலீடு, நிதி நிர்வாகம்
ஆகியவற்றைப் பொறுத்தவரை இவ்விதிகளில் மூன்றாவதை விட முதலாவது விதியே
முக்கியமானது. அது ஒரு ரொம்ப எளிமையான விதி - ஒரு ஆரம்ப உந்து சக்தி
இல்லாவிட்டால் எந்த ஒரு பொருளும் இருக்கும் இடத்திலேயே இருக்கும்
என்பதுதான் அந்த விதி. இதை 'செயலின்மை' (inertia) விதி என்று சொல்வார்கள்.
முட்டுக்கட்டை
இதற்கும் முதலீடுகளுக்கும் என்ன சம்பந்தம்? முதலீடுகள் செய்ய முனைபவர்களில்
பெரும்பான்மை யினரை ஆட்கொண்டிருப்பது இந்த செயலின்மைதான். குறிப்பாக,
நீண்டகால அடிப்படையில் செய்ய வேண்டிய முதலீடுகள் என்றால்
‘அதெல்லாம் சும்மா செய்ய முடியாது, திட்டமிட்டுச் செய்ய வேண்டிய விஷயம்'
என்று ஒரு முட்டுக்கட்டை உருவாகிவிடும். இந்த திட்டமிடுதலைச் செய்வதற்கு
நேரமும் வாய்க்காது, அதில்லாமல் முதலீடுகள் செய்யவும் தயக்கம் இருக்கும்.
இதனால், நியூட்டனின் அசையாத பொருட்களைப் போல நமது முதலீட்டுத் திட்டம்
துவங்கப்படாமலேயே தேங்கி நிற்கும்.
எளிய முறைகள் போதும்
திட்டமிடுதல் என்பது முக்கியம்தான், மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரே வீச்சில்
நமது வாழ்க்கையையே ஒரு வரைபடமாக்கி முழுமையாக தீர்மானித்துக் கொண்ட
பிறகுதான் முதலீடுகளைத் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. சில எளிய
முறைகளைப் பயன்படுத்தினால் போதும், சுலபமாக ஒரு தோராயமான திட்டம் ஒன்றை
வகுத்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் முதலீடுகளைத் தொடங்கலாம். பின்னர்,
கொஞ்சம் நமது திட்டங்களில் ஒரு முழுமையைக் கொண்டு வந்து கொள்ளலாம்.
நிதிவளம் பெருக…
இப்படிச் செய்வதை ஏன் பரிந் துரைக்கிறேன் என்றால், முதலீடுகளைத்
துவங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தத்தான். நீண்ட கால
முதலீடுகள் என்பது காலத்தே துவங்கப்பட வேண்டிய ஒன்று. எவ்வளவு விரைவில்
துவங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. நமது ஆரம்ப முதலீட்டுப் பணமே
மிக அதிக அளவில் நமது நிறைவான நிதி வளத்தைப் பெருக்க உதவுகிறது.
சரி, ஆரம்பிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எளிமையான திட்டத்தினை வகுத்துக் கொள்வது எவ்வாறு? இதற்கான சில எளிய முறைகள் என்னென்ன?
குறிக்கோள் அவசியம்
இதற்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் குறிக்கோளுடன் முதலீடு செய்வது.
நம்மில் பெரும்பான் மையானவர்கள் நிதி வள முதலீடு என்பதை ஒரு மேம்போக்காக
மட்டுமே செய்கிறோம். கையில் கொஞ்சம் சேமிப்பு அல்லது மீள்தொகை இருக் கிறது
என்றால் அதை ஒரு வங்கி வைப்பு நிதியில்
‘போட்டு வைக்கலாமே' என்ற அளவில்தான் யோசிக்கிறோம். அல்லது கடைசி நிமிடத்தில் வரிச் சலுகைக்காக சில முதலீடுகளைச் செய்கிறோம்.
இப்படிச் செய்வதில் 2 குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்று, நமது முதலீடுகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும். இதனால் நமது நிதி வள
மேலாண்மையை சரிவரச் செய்ய முடியாது. இரண்டாவது குறை பாடு, எதற்காக எந்த
முதலீட்டைச் செய்கிறோம் என்ற ஒரு தீர்மானம் இல்லாமல் இருக்கும். அதனால்,
நமது முதலீடுகளில் ஒரு ஒழுக்கமின்மை மிக விரைவில் உருவாகி விடும்.
தீர்மானித்தல் அவசியம்
நாம் எதற்கு எந்த முதலீட்டினைச் செய்கிறோம் என்பதைத் தீர்மானித்த பின்
முதலீடு செய்வதே இதற்கு மாற்று. அதற்கு முன் நாம் நமக்கென சில நிதிசார்
குறிக்கோள்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இவை நீண்ட கால குறிக்கோள்களாக
இருத்தல் நல்லது.
நாம் அனைவருக்குமே நிதிசார் குறிக்கோள்கள் இருக்கத்தான் செய் கின்றன.
குடும்பங்களை நிர்வகிக்கும் பலருக்கும் குழந்தைகளின் எதிர்காலம், மேற்கல்வி
போன்ற செலவுகளுக்குப் பணம் தேவைப்படும். நாம் அனைவருமே ஒரு நாள்
பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறோம். அதன் பின்னர் வாழ்க் கையை குறைவின்றி
நடத்துவதற்கான வருமானத்திற்கு வழி தேவை. சிலருக்கு சீக்கிரமே ஒரு வீடு
வாங்கலாம் என்றும், அதற்குத் தேவையான முன்பணம் செலுத்துவதற்கு ஒரு தொகையும்
தேவைப்படும்.
நமது எளிமையான நிதித் திட்டம் என்பது முதலில் இத்தகைய குறிக் கோள்களில்தாம்
ஆரம்பிக்கின்றது. நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நமக்குத் தெரிந்த நம்
வாழ்க்கையின் நிதிசார் குறிக்கோள்களைப் பட்டிய லிடுவதுதான். ஒவ்வொன் றையும்
சென்றடைவதற்கு எத்தனை காலம் இருக்கிறது என்பதையும் குறித்துக் கொள்ள
வேண்டும். முடிந்தால், இந்தக் குறிக்கோளுக்கு இவ்வளவு பணம் தேவைப்படும்
என்று (மிக) உத்தேசமாகத் தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது. அப்படித்
தெரியாவிட்டாலும் பாதகமில்லை. குறிக்கோள்களை அடையாளப்படுத்தி இவற்றிற்காக
முதலீடு செய்யப் போகிறோம் என்று தீர்மானம் செய்து கொண்டால் போதும்.
குறுகிய காலத்திற்கு சில குறிக்கோள்கள் இருந்தாலும் சரி, அவற்றையும்
குறித்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கார்
வாங்க வேண்டும், அதற்கு ஒரு இரண்டு லட்ச ரூபாய் (முன்பணம்)
தேவைப்படுகிறதென்றால், அதுவும் ஒரு நிதிசார் குறிக்கோளே. நீண்ட காலத்
தேவைகளுக்கு மட்டுமே திட்டமிட வேண்டும் என்பதில்லை.
இதையெல்லாம் எதற்காகச் செய் கிறோம் என்றால், இந்தப் பட்டியலை உருவாக்கிய
பிறகு நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும், இவற்றில் ஒன்றுக்காக செய்வதாக நாம்
தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது காரணமற்ற முதலீடுகள் என்பதை அறவே
செய்யக்கூடாது.
முதலீடுகளைத் துவங்குவதற்கு இந்த முதல் அடிகள் போதுமானவை.
குறிக்கோள்களையும், அவற்றிற்கான கால அளவையும் நிர்ணயித்தல், பின்னர்
முதலீடுகளை அக்குறிக்கோள்களில் ஏதேனும் ஒன்றுக்கென ஒதுக்கீடு செய்தல் -
இவ்விரண்டையும் செய்தால் நாம் ஒரு திட்டமிட்ட முறையில் நமது முதலீடுகளைத்
துவங்கி விட்டோம், நடத்துகிறோம் என்று முறையாகி விடும்.
கட்டுரையின் ஆரம்பத்தில் நியூட்ட னின் முதல் விதி பற்றிச் சொன்னேன் அல்லவா?
அந்த விதியில் ஒரு பாதியைத் தான் சொன்னேன். அதற்கு இன்னொரு பாதி
இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு விசை கொடுக்கப்பட்டு நகர ஆரம்பித்த ஒரு
பொருள் ஒரு தடுக்கும் விசை வரும் வரையில் நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.
திட்டமிட்டுச் செயல்படும் முதலீடு களும் இப்படித்தான். நீங்கள் இந்த எளிய
முறையைப் பயன்படுத்தித் தொடங்கி விட்டீர்களேயானால், நீங்கள் போட்ட திட்டம்
நாளுக்கு நாள் சீரும் செழுமையும் அடையக் காண்பீர்கள். உங்கள் நிதி வளமும்
பெருகக் காண்பீர்கள்...
No comments:
Post a Comment