Pages

Sunday, 10 May 2015

ஓராண்டில் நாதெள்ளா சாதித்தது என்ன?



மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் நண்பர், 33 வருடங்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியர், பில்கேட் ஸுக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் ஸ்டீவ் பால்மர். இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்த போது அமெரிக்க பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்தன.



ஸ்டீவ் பால்மர் பல விஷயங்களை செய்யத் தவறிவிட்டார், என்பது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கருத்தாக இருந்தது. அதனால் அவர் பதவியில் இருந்து விலகும் செய்தி, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி சத்யா நாதெள்ளா பொறுப்பேற்றார்.


ஒரு வருடத்துக்கும் மேலாக முடிவ டைந்த நிலைமையில் சத்யா நாதெள்ளா சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றே பல அமெரிக்க பத்திரிகைகள் எழுதி இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடியது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 40 வருடங்கள் சிறப்பாக செயல்படுவது மிகப்பெரிய விஷயம் என்றாலும், இடையில் சில வருடங்கள் சந்தையில் இழந்த மதிப்பை அடைய முயற்சிப்பது அதைவிட பெரியது. அதை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் நாதெள்ளா.


விண்டோஸ் 10


இதுவரை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் செயலிகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படாது. இப்போது அனைத்து வகையான செயலிகளையும் பயன்படுத்த முடியும் என அறிவித்தார். தவிர, ஏற்கெனவே விண்டோஸ் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் விண்டோஸ் 10-யை புதுப்பித்துக்கொள்ளலாம். இதன் மூலம் மொபைல் சந்தையில் கணிசமான இடத்தினை மைக்ரோசாப்ட் பிடிக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.


அடுத்து 18,000 நபர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கிறார். இதில் 13000 நபர்கள் நோக்கியா நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள். இது முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. Minecraft என்னும் நிறுவனத்தை கையகப்படுத்தியது உள்ளிட்ட விஷயங்களைச் செய்தார்.


ஸ்டீவ் பால்மர் ஒரு கோபக்காரர், கூட்டத்தின் போது நாற்காலியை கூட தூக்கி எறிவார், ஆனால் சத்யா நிறுவனத்தின் கலாசாரத்தையே மாற்றி இருக்கிறார். அவருடன் வேலை செய்யும்போது அவரது உற்சாகம் மற்றவர்களுக்கு பரவும், அடுத்தவர்களுக்கு முன்மாதிரி என்று அவருடன் நீண்ட நாட்கள் பணியாற்றிய பில் ஹில்ப் தெரிவித்திருக்கிறார்.


சத்யா நாதெள்ளா எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, அவர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மைக்ரோசாப்ட் பங்கு 40% வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு தலைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில், மைக்ரோசாப்டில் எந்த பெரிய மாற்றமும் நடக்கவில்லை. பால்மர் சென்ற அதே திசையில்தான் மைக்ரோசாப்ட் பயணிக்கிறது. அவர் செய்ய நினைத்த விஷயங்களை வேறு வடிவில் செய்கிறார் நாதெள்ளா என்ற விமர்சனமும் இருக்கிறது.


பாராட்டோ விமர்சனமோ காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment