Pages

Sunday, 10 May 2015

பிராண்டு பெயருக்காக பணத்தை கொடுக்கலாமா?



பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. பொருளின் மதிப்பைவிட அதிகமான தொகையைத்தான் கொடுக்கிறோம் என்று தெரிந்துகொண்டே பிராண்டட் பொருட்களுக்கு அதிக விலை கொடுக் கிறோம். ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை. தனி அந்தஸ்தை கொடுக்கும் சில பிராண்டுகளுக்கும் அதிக விலை கொடுக்கத்தான் செய்கிறோம்.


அதே சமயத்தில் பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. பிராண்டட் பொருட்களுக்கு ஈடான அதே தரத்தை பிராண்டட் அல்லாத பொருட்களிலிருந்தும் பெற முடியும். பெரிய நிறுவனங்கள் தங்களது பிராண்டை உருவாக்க கோடி கோடி யாக செலவு செய்து மக்களிடம் நம்பிக் கையைப் பெறுகிறார்கள். அதற்காகும் செலவுகளை பொருட்களின் விலையை ஏற்றுவதன் மூலம் சரிசெய்து விடுகிறார்கள். கோடிகளில் விளம்பரம் செய்யப்படாத பொருட்கள் பிராண்டாக உருவாக முடியவில்லை என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அதேசமயத்தில் பிராண்டட் பொருட்களை அப்படியே காப்பியடித்து போலியான பிராண்டுகளை உருவாக்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பிராண்டுக்கான விலையா


விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்றுதான் மக்கள் நம்பி வாங்குகிறார்கள். இதே தரம் பிராண்ட் அல்லாதவற்றிலோ அல்லது பிற தயாரிப்புகளிலோ கிடைக்குமா என்றால் உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள் பிராண்டிங் ஆய்வாளர்கள்.


அன்பிராண்ட் தயாரிப்புகளாக வந்த ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறியீடுகள் இல்லை என்று அரசே தடை செய்துள்ளதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். காலணிகள் விற்பனையில் பெரிய சந்தை மதிப்பை கொண்டிருந்த முன்னணி பிராண்ட் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் போட்டிகள் அதி கரித்தது மட்டுமல்ல, அந்த பிராண்டுக்கு கொடுக்கும் விலை யில், தரமான தயாரிப்பை போட்டி யாளர்களும் கொடுக்கத் தொடங்கி விட்டனர். எனவே பிராண்டை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குவார்கள் என்றும் நினைக்க தேவையில்லை.


எனவே பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் தரமாக இருக்கும் என்றோ, வளர்ந்து வரும் நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமற்றவை என்றோ புரிந்து கொள்ளக் கூடாது. பிராண்டுகளுக்கு கொடுக்கும் விலை அதன் தரத்திற்காக கொடுக்கும் விலையாக பார்க்காமல் மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான விலை யாகத்தான் பார்க்க வேண்டும். எனவே பிராண்டட் அல்லாத பொருட்கள் மீது மோசமான பார்வையும் வேண்டாம் என்பது பிராண்டிங் ஆய்வாளர்கள் கருத்து.


பிராண்டட் பொருட்களோ பிராண்ட் அல்லாத பொருட்களோ நமது தேவைக்கு ஏற்ப தேடிப்பிடித்து வாங்குவதே பயன் தரும் என்பது அனுபவப்பட்ட வர்களின் ஆலோசனையாக இருக்கிறது.


மின் சாதனங்கள்


வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது பிராண்டட் பொருட்கள்தான். பிராண்ட் மதிப்பு இல்லாத பொருட்கள் விற்பனை மந்தமாகத்தான் இருக்கிறது என்கின்றனர் விற்பனையாளர்கள். ஆனால் பிராண்டட் நிறுவனத்தின் விலையில் அதே தரத்திலான இதர நிறுவனங்களின் தயாரிப்புகளை விலை குறைவாகவே வாங்கிவிட முடியும் என்கிறார்கள்.


எல்இடி டிவி, வாஷிங்மெஷின், குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி வகைகளில் இந்த விலை வித்தியாசத்தை பார்க்கலாம். இவற்றில் போலிகளை உருவாக்க முடியாது. தரத்துக்கு ஏற்ப விற்பனைக்கு பிறகான சேவை, வாரண்டி, கியாரண்டி உத்திரவாதங்கள், பிரச்னை ஏற்பட்டால் வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து கொடுக்கும் வசதிகள் கிடைப்பதை பொறுத்து பிராண்டாக உருவாகாத நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்த வகைகளில் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்கள்.



அதேநேரத்தில் சிறிய ரக வீட்டு உபயோகப் பொருட்களான மிக்ஸி, பேன், மைக்ரோவேவ் அவன், இஸ்திரி பெட்டி போன்றவற்றில் பிராண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த வகையிலான சிறு தயாரிப்புகள் அனைத்தும் அவுட் சோர்ஸிங் முறையில் சீன தயாரிப்புகளாக இருக்கும். எனவே இவற்றில் பிராண்ட் அல்லாத தயாரிப்புகளை நாடவேண்டாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.


மின் பொருட்கள்


மின் சாதனங்களை விட மின் பொருட்கள் வாங்குவதில் (எலெக்ட் ரிக்கல்) அறிமுகமில்லாத ரகங்களை நாடுவது பாதுகாப்பு கிடையாது. பிராண்டட் நிறுவனங்கள் அரசின் தர அளவீடுகள்படி தயாரிப்புகளை சந்தைப் படுத்துவார்கள். ஏனென்றால் தரத்தில் சிறிய குறை இருந்தாலும் சந்தையில் அவர்களது பிராண்ட் மதிப்பை இழக்கக்கூடும். தவிர ஐஎஸ்ஐ போன்ற தரச்சான்று நிறுவனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள்படி தயாரிப்புகள் இருக்கும். எனவே இது போன்ற பொருட்களை வாங்குகிறபோது பிராண்டுகளுக்கான விலையை யோசிக்கக்கூடாது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக அறிமுகமில்லாத நிறுவனப் பொருட்களில் முயற்சி எடுக்க வேண்டாம்.


உணவுப் பொருட்கள்


உணவுப் பொருட்கள் சந்தையில் பிராண்டுகள் மட்டுமல்ல, போலி பிராண்டு களின் ஆதிக்கமும் நிறைந்துள்ளது. புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரைப் போலவே எழுத்துக்களை ஒன்றிரண்டு மாற்றி கண்டுபிடிக்க முடியாதபடி டூப்ளி கேட்டுகளும் இருக்கும். ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக்கள் நன்றாக மனதில் பதிந்தால்தால் தப்பிக்க முடியும்.


பல ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களின் பிஸ்கட்டுகள், பால், சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவை தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவை.


இவை பல ஆண்டுகளாக இருப்பதால் நம்பிக்கை யோடு வாங்கலாம். ஆனால் போலி பிராண்டுகள் நமது உடல்நலத்துக்கு கேடு கொண்டுவரலாம். போலிகள் மட்டுமல்ல பிராண்ட் அல்லாதவைகளும் சில நேரங்களில் சிக்கல்தான். இந்த துறையில் பெரிய நிறுவனங்களின் பிராண்டுகள் தவிர உள்ளூர் அளவிலான பிராண்டுகளும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் அதையும் கவனிக்க வேண்டும்.
இதுதவிர பெரிய நிறுவனங்கள் பெயரில் அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத துறைகளில் போலி பிராண்டுகளும் சந்தையில் உள்ளது. பெரிய நிறுவன தயாரிப்புதானே என்று நம்பி வாங்குவதும் நடக்கும்.


மேலே கொடுக்கப்பட்டவை சில அடிப்படையான விஷயங்கள்தான். பிராண்ட் மோகத்தில் எதையும் ஆரா யாமல் வாங்குபவர்களுக்கான சில ஆலோசனைகள்தான். பிராண்டே உயர்ந்தது என்று நினைத்து, அதிக பணம் கொடுக்கவும் தேவையில்லை., இளக்காரமாக நினைத்து அன்பிராண்ட் பொருட்களை புறக்கணிக்கவும் தேவையில்லை.


தரம், நீண்ட நாள் உழைக்கும் தன்மை, வாடிக்கையாளர் நன்மதிப்பு, பாதுகாப்பு, உடல்நலம் இவற்றின் அடிப்படையில் போலி பிராண்டுகளை புறக்கணிக்கும் அதேவேளையில் முன்னணி பிராண்ட் என்பதற்காகவே நமது பணத்தை கொட்டிக் கொடுக்கவும் தேவையில்லை. தரமான பொருளை தேடிப்பிடித்து வாங்க வேண்டியது நுகர்வோரின் பொறுப்பு என்பதைப் புரிந்து கொள்வோம்.

ஓராண்டில் நாதெள்ளா சாதித்தது என்ன?



மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் நண்பர், 33 வருடங்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியர், பில்கேட் ஸுக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் ஸ்டீவ் பால்மர். இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்த போது அமெரிக்க பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்தன.



ஸ்டீவ் பால்மர் பல விஷயங்களை செய்யத் தவறிவிட்டார், என்பது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கருத்தாக இருந்தது. அதனால் அவர் பதவியில் இருந்து விலகும் செய்தி, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி சத்யா நாதெள்ளா பொறுப்பேற்றார்.


ஒரு வருடத்துக்கும் மேலாக முடிவ டைந்த நிலைமையில் சத்யா நாதெள்ளா சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றே பல அமெரிக்க பத்திரிகைகள் எழுதி இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடியது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 40 வருடங்கள் சிறப்பாக செயல்படுவது மிகப்பெரிய விஷயம் என்றாலும், இடையில் சில வருடங்கள் சந்தையில் இழந்த மதிப்பை அடைய முயற்சிப்பது அதைவிட பெரியது. அதை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் நாதெள்ளா.


விண்டோஸ் 10


இதுவரை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் செயலிகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படாது. இப்போது அனைத்து வகையான செயலிகளையும் பயன்படுத்த முடியும் என அறிவித்தார். தவிர, ஏற்கெனவே விண்டோஸ் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் விண்டோஸ் 10-யை புதுப்பித்துக்கொள்ளலாம். இதன் மூலம் மொபைல் சந்தையில் கணிசமான இடத்தினை மைக்ரோசாப்ட் பிடிக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.


அடுத்து 18,000 நபர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கிறார். இதில் 13000 நபர்கள் நோக்கியா நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள். இது முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. Minecraft என்னும் நிறுவனத்தை கையகப்படுத்தியது உள்ளிட்ட விஷயங்களைச் செய்தார்.


ஸ்டீவ் பால்மர் ஒரு கோபக்காரர், கூட்டத்தின் போது நாற்காலியை கூட தூக்கி எறிவார், ஆனால் சத்யா நிறுவனத்தின் கலாசாரத்தையே மாற்றி இருக்கிறார். அவருடன் வேலை செய்யும்போது அவரது உற்சாகம் மற்றவர்களுக்கு பரவும், அடுத்தவர்களுக்கு முன்மாதிரி என்று அவருடன் நீண்ட நாட்கள் பணியாற்றிய பில் ஹில்ப் தெரிவித்திருக்கிறார்.


சத்யா நாதெள்ளா எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, அவர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மைக்ரோசாப்ட் பங்கு 40% வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு தலைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில், மைக்ரோசாப்டில் எந்த பெரிய மாற்றமும் நடக்கவில்லை. பால்மர் சென்ற அதே திசையில்தான் மைக்ரோசாப்ட் பயணிக்கிறது. அவர் செய்ய நினைத்த விஷயங்களை வேறு வடிவில் செய்கிறார் நாதெள்ளா என்ற விமர்சனமும் இருக்கிறது.


பாராட்டோ விமர்சனமோ காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

சூரிய மின்சாரம்







நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத மரபு சாரா எரிசக்தி மீது உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது.


சூரியன் தன் மொத்த பலத்தைக் காண்பிக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. அனல் மின்சாரத்தை விட அதிகம் செலவானாலும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறையும். சூரிய மின்சாரம் பற்றிய சில தகவல்கள்.


இந்தியாவில் சூரிய சக்தி மூலம் 3,002 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத் முதல் இடத்தில் இருக்கிறது.
சர்வதேச அளிவில் சூரிய மின் உற்பத்தியில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 38.2 ஜிகாவாட், சீனா 28.2 ஜிகாவாட், இத்தாலி 18.5 ஜிகாவாட், அமெரிக்கா 18.2 ஜிகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தி செய்கிறது.
ஜெர்மனி தன்னுடைய மொத்த தேவையில் 50 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது.


2022-ம் ஆண்டு ஒரு லட்சம் மெகாவாட் (100 ஜிகாவாட்) சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற சவாலான இலக்கினை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 6.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.


இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் ஆண்டுக்கு 15000 மெகா வாட் அளவுக்கு உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு 15,000 மெகாவாட் அளவுக்கு எந்த நாடும் மின் உற்பத்தியை உயர்த்தவில்லை. சீனா 2012-ம் ஆண்டு 12,000 மெகாவாட் அளவுக்கு தன்னுடைய திறனை உயர்த்தியது.


ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் (சரங்கா கிராமத்தில்) அமைந்துள்ளது. 4,900 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்கப்பட் டுள்ளது. இங்கு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தி 500 மெகாவாட் உற்பத்தி செய்யமுடியும்.


17 சோலார் பூங்காங்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 12500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.


சூரிய சக்தியை வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் வீடுகள்/அலுவலகங்களில் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் இப்போது அதிகம் பயன்படுத் தப்படுகிறது.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் முருகன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் முதல் பவர்லூம் நிறுவனமாகும். நிறுவனத்தின் மேற்கூரையை பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்கிறது.


குஜராத்தில் நர்மதா ஆற்றின் கால்வாய் மேலே சோலார் பேனல்களை அமைத்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தண்ணீரும் ஆவியாகாது. மின்சாரமும் கிடைக்கும். சர்வதேச அளவில் கால்வாய் மூலம் சூரிய சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது இங்குதான் முதல் முறை. 17.50 கோடி செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல் செலவு: முதலீட்டுத் திட்டத் தேர்வில் கவனம் தேவை



பொதுவாக நிதி நிர்வாகம் பற்றி எழுதும் என்னைப் போன்றவர்கள் ஒரு அணுகுமுறையைக் கையாள்கிறோம். முடிந்த வரை எந்த ஒரு விஷயமானாலும், 'இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமில்லை, கொஞ்சம் புரிந்து கொண்டால் போதும்' என்ற வகையில் விளக்க முற்படுகிறோம். நிதி நிர்வாகம் குறித்து வாசகர் மனதில் இருக்கும், 'இது ஒரு கஷ்டமான விஷயம்' என்ற ஒரு அச்சத்தை விலக்கவே அவ்வாறு எழுதுகிறோம்.


எளிமையானது


பெரும்பான்மையான விஷயங்களில் இது உண்மையும் கூட. நிதி நிர்வாகத்தின் அத்தனை கூறுகளும் ஓரளவு கல்வியறிவு உள்ள யாராலும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் தான். அந்த அடிப்படையில்தான் நான் இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எழுதிய விஷயங்களை, 'உங்களால் முடியும் நண்பர்களே' என்ற தொனியில் எழுதி வந்திருக்கிறேன்.


சென்ற சில வாரக் கட்டுரைகளில், பரஸ்பர நிதிகள் எப்படிச் செயல் படுகின்றன, அவற்றின் வகைகள் என்ன, நன்மைகள் என்ன, அவற்றில் முதலீடு செய்ய நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் திட்ட முறை என்ன என்றெல்லாம் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் பிறகு, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து முன்வரும் ஒரு முதலீட்டாளர், எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று யோசிக்கும் போது எப்படி முடிவெடுக்க வேண்டும்? அது தான் இன்றைய கட்டுரையின் களம்.


இக்கட்டுரையிலும், சென்ற வாரங்களைப் போல, 'இது ஒன்றும் பெரிய விஷயமில்லை, சுலபமாக செய்து விடலாம்' என்ற வகையில் பிரஸ்தாபித்து எழுதலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், யோசித்துப் பார்த்தால் அது சரியில்லை என்று தோன்றுகிறது.


கடினமா? சுலபமா?


இந்திய பரஸ்பர நிதிச் சந்தையில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட நிதித்திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபடும் திட்டங்கள் மட்டுமே ஐநூற்றுக்கும் மேற்பட்டவை. மற்ற திட்டங்கள் கடன் சந்தைத் திட்டங்கள் அல்லது கலப்புத் திட்டங்கள் அல்லது மற்ற (தங்கம், அயல்நாட்டுச் சந்தை போன்ற) திட்டங்கள். இவற்றிலிருந்து நமக்கேற்ற நல்ல திட்டங்களைத் தேர்வு செய்வது என்பது இயலாத காரியமல்ல; ஆனால் சுலபமானதும் இல்லை.


பலவித அளவீடுகள்


ஏனெனில், ஒரு நிதித்திட்டத்தை மதிப்பிட பல அளவுகோல்கள் உள்ளன. இவை ஒரு திட்டத்தின் வகைமையைப் பொறுத்து மாறுபடவும் செய்யும். மிக எளிமையான முறையில் கடந்த ஒன்று, மூன்று, ஐந்து வருடங்களில் எந்தத் திட்டங்கள் அதிக லாபம் பெற்றுக் கொடுத்திருக்கின்றன என்று பார்த்து சட்டென்று தேர்வு செய்து விட முடியாது.


அப்படிப்பட்ட திட்டங்கள் எந்த வகையான முதலீடுகள் செய்தன, எப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்தன, இந்த நல்ல லாபம் என்பதை ஒரு காலகட்டத்தில் மட்டும் தந்தனவா இல்லை நிலையாகத் தந்தனவா போன்ற பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து அவற்றின் அடிப்படையில் தான் எவை நல்ல திட்டங்கள் என்று தேர்வு செய்ய வேண்டும்.


வெவ்வேறு மதிப்பீட்டு முறை


மேலும் ஒவ்வொரு வகைத் திட்டத்திற்கும் வெவ்வேறு மதிப்பீட்டு முறைகள் உள்ளன. கடன் சந்தை சார்ந்த திட்டமென்றால், எத்தகைய கால நீட்டத்திற்கான கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும், கலப்புத் திட்ட மென்றால், எப்பொழுது பங்கு வர்த்தக சதவிகிதத்தை அதிகரிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேசத் திட்டங்களுக்கு வேறு அளவு கோல்கள், துறை-சார்ந்த திட்டங்களுக்கு வேறு மாதிரி இத்யாதி இத்யாதி.


மீண்டும் சொல்கிறேன் - இது சாத்தியமில்லை என்று சொல்ல வரவில்லை. சில விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து, கொஞ்ச காலம் சில நிதித் திட்டங்களை ஆராய்ந்து அவற்றின் கடந்த காலச் செயல்திறன்களை அலசிப் பார்த்தால், இது நல்ல திட்டம், இது சுமாரான திட்டம் என்றெல்லாம் புரிந்து விடும். இதற்கான நேரமும் முனைப்பும் இருப்பவர்கள் கட்டாயம் இம்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிச் செய்கையில் நமக்குக் கிடைக்கும் கல்வியும் அது தரும் நம்பிக்கையும் மதிப்பிட முடியாதவை.


ஆலோசகரை நாடலாம்


ஆனால், அப்படிச் செய்ய முடியாத வர்கள் அல்லது தயங்குபவர்களுக்கும் ஒரு வழி இருக்கிறது. அது ஒரு நிதி நிர்வாக ஆலோசகரை அணுகு வது. இப்படிப்பட்ட விஷயங்களில் ஆலோ சனை வழங்குபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பலர் இருக்கிறார்கள். சில இணைய தளங்களும் இவ்வகை ஆலோ சனைகளை வழங்குகின்றன.


இவர்களில் சிலர் இந்தச் சேவையை ஒரு சிறு கட்டணம் பெற்றுக் கொண்டு செய்கிறார்கள். பலர் கட்டணமின்றியே செய்கிறார்கள் - அவர்கள் மூலமாக நீங்கள் முதலீடு செய்யும் போது நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு ஒரு சேவைக் கட்டணத்தை வழங்குகிறது. ஆதலால், உங்களிடமிருந்து பணம் எதுவும் பெறாமலேயே அவர்களால் இந்தப் பணியைச் செய்ய முடிகிறது.


இணையதளம் மூலம்…


உங்களுக்கு உதவக் கூடிய ஆலோசகர் யார் என்பதை நீங்கள் பரஸ்பர நிதி ஆலோசகர்களைப் பட்டியலிடும் ஆம்ஃபி இந்தியா இணைய தளத்தில் சென்று கண்டடையலாம் (www.amfiindia.com). அல்லது இணைய சேவைத் தளங்களையும் கூகுளில் தேடிக் கண்டு பிடிக்கலாம்.


யாரை தேர்வு செய்வது?


உங்களுக்கான ஒரு நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக பரஸ்பர நிதிகளை பரிந்துரைப்பதை விட காப்பீட்டு முதலீடுகளைப் பரிந்துரைப்பதில் ஒரு ஆலோசகருக்கு வருமானம் அதிகம் உண்டு. ஆனால் அத்தகைய காப்பீட்டு முதலீடுகள் பலவும் நீண்ட காலத் திட்டங்களுக்கு உகந்தவை அல்ல. ஆகையால், பரஸ்பர நிதிகளைத் தேர்வு செய்து பரிந்துரைக்கும் ஆலோசகர்களை மட்டுமே நாடவும்.


அப்படிப்பட்ட ஆலோசகர்கள் உங்களிடம் முதலில் உங்கள் தேவைகள் என்ன, உங்கள் முதலீட்டுக் கால நீட்டம் என்ன என்பதைக் கண்டறிந்து பின்னர் அவற்றிற்கேற்ப நல்ல திட்டங்களைப் பரிந்துரைப்பார்கள். இவை இரண்டுமே முக்கியம். ஏனெனில், சரியான வகைத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் உங்கள் ரிஸ்க் அதிகமாகும், அல்லது சரியான லாபம் கிடைக்காது.


சரியான வகைகளில், நல்ல திட்டங்களைத் தேர்ந்தெடுக்காவிடில், உங்கள் முதலுக்கே மோசமாகி விடக்கூடும். ஆகையால், நல்ல ஆலோசகரை நாடி, நேர்த்தியான வரைமுறை செய்து, சரியான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதே சிறப்பான முறை.

துணிவே தொழில்: வெற்றியை நிர்ணயிப்பது எது?



வெற்றிகரமான தொழிலதிபர்களாக வலம் வருவோரின் பின்னணியில் அவர்களுடைய வெற்றியின் சூத்திரங்களாக விளங்கியவை இலக்கும், திட்டமிடலும்தான். இலக்கை நிர்ணயிப்பது திட்டமிடுவது ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை கடந்த வாரம் பார்த்தோம்.


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்குகளில் பேசும்போது அவர்கள் தாங்கள் காலாண்டு அல்லது முதல் செமஸ்டரில் எந்தெந்த பாடங்களை எவ்வளவு நாளில் படிக்க வேண்டும், தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறுவர்.


ஆனால் புத்தகத்தின் புது மணம் போகப் போக மாணவர்களின் இலக்கும் குறைந்துகொண்டே போகும். இதனால் தேர்வின் போது பெரும்பாலான மாணவர்கள் சோபிக்காமல் போவதை சுட்டிக் காட்டியுள்ளேன்.


தொழில் முனைவோராக தொழில் தொடங்குவோர் ஆரம்ப காலத்தில் இலக்கை நிர்ணயித்து செயல்படுவர். ஆனால் காலம் போகப் போக அவர்களது ஆவேசம் குறைந்துபோகும். இதனால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்திக்க நேரும்.


இலக்கு, திட்டமிடுதல் மட்டுமே வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாக போதுமா? என்றால் அது போதாது. அதற்கு மேல் செயல்படுத்துதல் (Execution) அதாவது திட்டமிட்ட இலக்கை நோக்கி நமது செயல்பாடுகள் அமைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


தொழில் முனைவோராக தொழில் தொடங்குவோர் ஆரம்ப காலத்தில் இலக்கை நிர்ணயித்து செயல்படுவர். ஆனால் காலம் போகப் போக அவர்களது ஆவேசம் குறைந்துபோகும். இதனால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்திக்க நேரும். இலக்கு, திட்டமிடுதல் மட்டுமே வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாக போதுமா? என்றால் அது போதாது. அதற்கு மேல் செயல்படுத்துதல் (Execution) அதாவது திட்டமிட்ட இலக்கை நோக்கி நமது செயல்பாடுகள் அமைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


தொழில் முனைவோராகத் தொடங்கி இலக்கை நிர்ணயித்து அதைத் திட்டமிட்டு செயல்படுகிறவர்கள் நிச்சயம் வெற்றியை எட்டியுள்ளனர். தோல்வியைச் சந்தித்த பெரும்பாலானோர் நிர்ணயித்த இலக்கிற்கு உரிய செயல்வடிவம் கொடுக்கவில்லை என்பதுதான் ஆராய்ச்சி பூர்வமான உண்மை. இலக்கை நிர்ணயித்து, அதற்காக திட்டமிடலை உருவாக்க அதிக நேரம் செலவிடுகிறோம்.



ஆனால் அதை செயல்படுத்த உரிய நேரம் அளிக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ச்சியான கண்காணிப்பு மிக மிக அவசியம்.

தினசரி, வாரந்தோறும், மாதந்தோறும் கண்காணித்து திட்டப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை உடனுக்குடன் மேற் கொள்ள வேண்டும். செயல்வடிவம் கொடுப்பதில் சுணக்கமாக சோர்ந்து போனால் இலக்குகளை எட்ட முடியாது. தலைசிறந்த தொழிலதிபர்களின் வெற்றி ரகசியம் நிர்ணயித்த இலக்கை, நிர்ணயித்த காலத்தில் எட்டியதுதான்.
இலக்கை நிர்ணயித்து அதை உரிய காலத்தில் உரிய நேரத்தில் சென்றடைய தேவையான திருத்தங்களை அவ்வப்போது மேற்கொண்டு செயல்படுத்தாவிட்டால் வெற்றியாளராகும் வாய்ப்பை இழந்து விடுவோம்.


தொழில் முனைவோருக்கு இலக்கு, திட்டமிடுதல் ஆகியவற்றோடு அதை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம், கண்காணிப்பது மிக அவசியம்.
வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் அல்லது துறைகளில் சாதனை புரிந்தவர்கள் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் என அனைவருமே தங்கள் துறைகளில் எட்ட வேண்டிய இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்தி வெற்றி கண்டவர்களாக இருக்கின்றனர். இலக்கு, திட்டமிடுதல், செயல்படுத்துதல் இவற்றையெல்லாம் மீறி கூடுதலாக ஒரு விஷயமும் அவசியம். அதாவது எந்தத் தொழிலில் இறங்கியுள்ளோமே அத்தொழில் துறை வல்லுநர்களை நமது ஆலோசகர்களாகக் கொண்டு செயல்படுவது அவசியம்.
நமது வியாபாரம், நமக்குத் தெரியாதா? இதில் எதற்கு அடுத்த நபரின் ஆலோசனை என்று தோன்றக் கூடும்.


ஆனால் இத்தகைய ஆலோசகர் இருந்தால், அவர்களது அறிவுரை நமது தொழிலை சீர்படுத்த உதவும். நாம் நிர்ணயித்த இலக்கை நோக்கி செல்கிறோமா, நிர்ணயித்த இலக்கு சாத்தியமானதா என்பதையெல்லாம் இத்தகைய ஆலோசகர்கள் மிகத் துல்லியமாகக் கூறிவிடுவர். எனவே தொழிலில் வெற்றி பெற நிபுணர்களின் அறிவுரை, ஆலோசனை மிகவும் அவசியம்.


எனது சொந்த அனுபவத்தில் இதுவரை 12 நிறுவனங்களைத் தொடங்கி அதில் 7 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி அவற்றி மற்றவர்களுக்கு விற்றுள்ளேன். 2 நிறுவனங்களில் படு தோல்வியைச் சந்தித்தேன். தெரிந்த தொழிலைத்தான் தொடங்கினேன். இதில் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் யார் காரணம். நான்தான். எனவே எந்தத் தொழில் தொடங்கினானும் அதில் வெற்றி பெறுவதற்கு ஆலோசகர்கள் மிகவும் அவசியமாகிறார்கள்.



நீங்கள் ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருக்கும்போது அது சரியானபடி நடக்கிறதா அல்லது இலக்கு மாறிச் செல்கிறதா என்று உங்களால் எளிதில் உணர முடியாது. ஏனெனில் தொழிலின் ஒரு அங்கமாக நீங்கள் மாறிவிடுவீர்கள். உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
ஆனால் வெளியிலிருந்து அதாவது மூன்றாம் நபராக பார்ப்பவர்களுக்கு இதில் உள்ள நல்லது, கெட்டது தெளிவாகப் புரியும். ஆலோசனை கூறுவதோடு, மாற்றுத் தீர்வுகளையும் அளிப்பர்.


நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா இந்த திசையில் சென்றால் இலக்கை எட்ட முடியுமா என்று கூறுவர். இலக்கு மாறும்போது அதை உணர்த்தி சரியான பாதைக்கு திருப்புவதில் வெற்றியாளர்களின் பங்கு மகத்தானதாக உள்ளது.


நீங்கள் யாராக உருவாக வேண்டும் என்பதில் உங்களுக்கு ரோல் மாடல் எனப்படும் முன்னோடிகள் இருக்கலாம். ஆனால் அவ்விதம் உருவாவதற்கு உங்க ளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் உங்களது ஆலோசகர்கள்தான்.
இலக்கு, திட்டமிடுதல், செயல் படுத்துதல் ஆகிய மூன்றும் செயல்படுத்தினால் கிடைப்பது ரிசல்ட். அது எவ்வாறு இருக்கும் என்பது வரும் வாரங்களில் பார்க்கலாம்.

வட்டி விகிதம் பூஜ்ஜியத்துக்கும் கீழே குறையுமா?


நீங்கள் ஒருவருக்கு ரூ.1,000 கடன் கொடுக்கிறீர்கள். அடுத்த வருடம் அவர் உங்களுக்கு ரூ. 1,100 கொடுத்தால், வட்டி ரூ.100 அதாவது 10%. மாறாக ரூ.900 கொடுத்தால் வட்டி -10%. அதாவது உங்கள் பணம் ரூ.1,000-ஐ ஒரு வருடம் வைத்துக்கொள்வதற்கு அவருக்கு நீங்கள் ரூ100 கொடுப்பதாக அர்த்தம்.

இதுதான் எதிர்மறை வட்டி. ஒரு வங்கி “எங்களிடம் கடன் வாங்குங்கள், வட்டி கட்டவேண்டாம், மாறாக உங்களுக்கு நாங்கள் கமிஷன் தருகிறோம்” என்றால் எப்படி இருக்கும்?


யார் முதலீடு செய்தாலும் அதில் வருமானம் எதிர்பார்ப்பதுதான் இயற்கை. பணத்தை யாரும் சும்மா வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறையும். எனவே 0% வட்டிக்கூட யாரும் கடன் கொடுக்க முன்வரமாட்டார்கள், இந்நிலையில் அதற்கு மேலும் ஒரு படி சென்று 0%விட குறைவாக வட்டி விகிதம் இருக்கமுடியாது என்பதுதான் பொருளியல் கணக்கு.


உண்மை வட்டி விகிதம் என்றால் என்ன?


நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கில் ரூ.10,000 வைத்திருக்கிறீர்கள். அதற்கு வங்கி வருடத்திற்கு 5% வட்டி கொடுக்கிறது. இதற்கு பெயர் இயல்பான அல்லது பெயரளவு வட்டி விகிதம் (nominal interest rate). இந்த ஒரு வருடத்தில் நீங்கள் 3% பணவீக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் உங்கள் உண்மை வட்டி விகிதம் 2% தான். நீங்கள் பெயரளவில் 5% வட்டி வாங்கினாலும், அதில் 3%-ஐ பணவீக்கம் அல்லது விலை ஏற்றம் காரணமாக இழக்கின்றீர்கள் எனவே, உங்களுக்கு உண்மையில் 2% வட்டி தான் கிடைக்கிறது.


ஆக, உண்மை வட்டி விகிதம் = பெயரளவு வட்டி விகிதம் பணவீக்கம். இதிலிருந்து நமக்கு கிடைக்கு பாடம், எப்போதும் நாம் வட்டிக்கு பணம் கொடுத்தாலும் அந்த வட்டி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும்.


இன்று வங்கிகளில் அதிகபட்சம் சிறு சேமிப்பு கணக்கில் 5% பெயரளவு வட்டி விகிதம் இருக்கிறது, ஆனால் பணவீக்கம் 7% என்றால் உண்மை வட்டி விகிதம் -2%. இதை நாம் கவனிப்பதில்லை.


நீண்டகால வைப்பு நிதியில் பொதுவாக உண்மை வட்டி விகிதம் 0%-யைவிட அதிகமாகத்தான் இருக்கும்.


ஐரோப்பாவில் எதிர்மறை வட்டி விகிதம்


ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் கொள்கை வட்டி விகிதம் என்ற ஒன்றை வைத்திருக்கும், இந்தியாவில் இது repo rate என்று பெயர், இது தற்போது 7.5% உள்ளது. இதுதான் மிக குறைந்த வட்டி விகிதமாக இருக்கும், இந்த வட்டி விகிதத்தில் தான் மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்கு குறுகிய கால கடன் கொடுக்கும்.


மேலும் இந்த வட்டி விகிதத்தை சுற்றியே மற்ற முக்கிய வட்டி விகிதங்களும் இருக்கும். உதாரணமாக வங்கிகளுக்கிடையே குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதம், குறுகிய கால அரசு கடன் பத்திரங்களின் மீதான வட்டி விகிதம் என எல்லாமே இந்த repo rateக்கு அருகில் இருக்கும்.


அடுத்ததாக repo rate குறையும் போதெல்லாம் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவு அதிகரித்து வட்டி விகிதம் குறையவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. repo rate அதிகமாகும் போதெல்லாம் வங்கிகள் கொடுக்கும் கடன் குறைந்து வட்டி விகிதம் அதிகமாகவேண்டும். எனவே, repo rate குறைந்தால் பண அளிப்பு அதிகம்மாகும், repo rate அதிகரித்தால் பண அளிப்பு குறையவேண்டும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) deposit rate -0.2% உள்ளது.


இதன் அர்த்தம் என்ன? ஐரோப்பியாவில் உள்ள மற்ற வங்கிகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கடன் வாங்கினால், அதற்கு வட்டி கட்ட தேவை இல்லை, கூடுதலாக ECB 0.2% பணத்தையும் கொடுக்கும்.


இதனால் ஐரோப்பிய நாடுகளில் 25% அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 0 விட குறைவாக உள்ளது. ஜெர்மனி நாட்டின் 10 வருட அரசு பத்திரம் 0.௦73% வட்டியுடன் விற்பனையாகிறது.


ஏன் இந்த நிலை?


2014 முழுவதும் 1%க்கு குறைவாக இருந்த பணவீக்கம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த வருட துவக்கத்தில் -0.6% குறைந்தது, கடந்த மார்ச் மாதம் -0.1%ஆக இருந்தது. பணவீக்கம் 0%க்கு குறைவாக இருந்தால் அதனை பணவாட்டம் (deflation) என்பர். அதாவது நாட்டின் சராசரியாக விலைவாசி குறைந்து போவதை இது குறிப்பிடுகிறது. தொடர்ந்து விலை குறைந்தால், வியாபாரம் பெருகாது, பொருளாதாரமும் வளர்ச்சி அடையாது. அதிக பணவீக்கம் எந்த அளவுக்கு கெடுதலோ அதே போல் சிறிய அளவு பணவாட்டமும் கெடுதல்தான்.


பொதுவாக பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்தால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து மேலும் அதிக கடன் கொடுத்து வளர்ச்சியை தூண்ட முயல வேண்டும். பணவாட்டம் ஏற்படும் போது இந்த போக்கு மேலும் அவசியமாகிறது. எனவே பல ஐரோப்பிய நாடுகளில் பணவாட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மத்திய வங்கிகள் கொள்கை விகிதத்தை 0%விட குறைவாக வைக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.


குறைந்த வட்டி விகிதம் என்ன விளைவை ஏற்படுத்தும்


குறைந்த வட்டி விகிதமும் அதிக கடனும் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஆனால் 2008 உலக நிதி சிக்கலுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் வட்டி விகிதத்தை குறைவாகவே வைத்துள்ளன. இருந்தாலும் அங்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இப்போது மட்டும் எப்படி பொருளாதாரம் வளரும் என்று எதிர்பார்க்கலாம் என்ற கேள்வி எழுகிறது. மேலும் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் போது அதிக கவனத்துடன் கடன் வழங்க வேண்டியுள்ளது.


குறிப்பாக சரியான துறைகளுக்கு கடன் வழங்க வேண்டும். இரண்டாவதாக, அரசு நிதி பற்றாக்குறையை அதிகரித்து, குறைந்த வட்டியில் கடன் வாங்கி வீண் செலவுகள் செய்யலாம்.


இது போன்ற பல சிக்கல்கள் இருக்க, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை பற்றி ECB யோசிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உண்மை பொரு ளாதார வளர்ச்சிக்கான வழி வேறு எங்கோ இருக்கிறது, அதனை கண்டுபிடிக்கவேண்டும். நிச்சயமாக அவ்வழி பண கொள்கையில் இல்லை என்பது தான் பலரின் ஆலோசனை.

உன்னால் முடியும்: "இன்னும் இங்கே நான் ஒரு தொழிலாளிதான்"- பேக்கரி மஹராஜ்!



செய்யும் தொழிலை ஆழ்ந்து நேசித்தால் வெற்றிப்படிகளை எட்டிப் பிடிக்கலாம் என்பதற்கு புதுக்கோட்டை சீனு.சின்னப்பா நிகழ் உதாரணம்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் `பேக்கரி மஹராஜ்’. முப்பது வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் சின்னப்பா ஆரம்பித்த பேக்கரி மஹராஜ் இன்றைக்கு 15 கிளைகளை பரப்பி நிற்கிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?

``திருத்துறைப்பூண்டியில எங்க தாத்தா சின்னதாக ஒரு ரொட்டிக் கடை வைச்சிருந்தாரு. அவருக்குப் பின்னால அதை நடத்த முடியல. ஐம்பது வருசத்துக்கு முந்தி எங்க குடும்பத்தோட பொருளாதாரச் சூழல் ரொம்ப மோசமா இருந்துச்சு. அதனால, என்னால எட்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியல.

வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். தாத்தா வழியில் நானும் பேக்கரி தொழிலை கத்துக்கிறதுக்காக திருத் துறைப்பூண்டியில ஒரு பேக்கரியில் 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அங்க தொழிலை கத்துக்கிட்டு வீட்டுலயே சின்னதா ஒரு அடுப்பைக் கட்டி ரெண்டு மூணு ரொட்டி அயிட்டம் போட ஆரம்பிச்சேன்.

அப்ப எனக்கு 19 வயசு. பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஏரியா கடைகளுக்கு சரக்குப் போடுறதுக்காக தினமும் 35 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பேன். தினசரி அம்பது அறுபது ரூபாய் வருமானம் கிடைக்கும். அன்னைக்கு அது பெரிய சம்பாத்தியம். அதுக்கப்புறம் தொழில் நுணுக்கங்களைக் கத்துக்குறதுக்காக காரைக்குடியில் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 15 வருசம் அங்க வேலை பார்த்தேன். அறந்தாங்கி, புதுக்கோட்டை, தேவகோட்டை பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு போய் வித்துட்டு வருவேன்.

வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வாரச் சந்தையில் எங்களோட பகோடா பிஸ்கட்டுக்காக ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும். அப்படி வரப் போக இருந் தப்பத்தான் புதுக்கோட்டையிலயே நம்ம ஏன் ஒரு பேக்கரியை ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. மார்க்கெட் பகுதியில் ஒரு கடையை பிடிச்சு 40 ஆயிரம் ரூபாய் செலவழிச்சு பேக்கரி மஹராஜை திறந்தேன்’’ என்கிறார் சின்னப்பா. முதலில் தொடங்கிய பேக்கரி வாய்க்கும் கைக்கும் இழுத்ததால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தவர், பேருந்து நிலையம் அருகில் இன்னொரு கடையை திறந்தார். அந்த லாபத்தில் முதல் கடையில் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்டினார். அத்துடன் அடுத்தடுத்த வருடங்களில் பல கிளைகளை திறந்தார். 


இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம் என்பதற்காக சின்னப்பா முதலாளி தோரணையில் குளுகுளு அறைக்குள் உட்கார்ந்திருக்கவில்லை. தனது பேக்கரி தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட சில வகை
‘கேக்’குகளை இவரே தயார் செய்து பூக்கள் வரைகிறார். 


இதற்காக தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கம்பெனிக்கு வந்து விடுகிறார் 62 வயதை கடந்து கொண்டிருக்கும் சின்னப்பா.
‘‘யாரா இருந்தாலும் தொழிலையும் தொழிலாளியையும் மதிக்கக் கத்துக்கணும். பணத்தைப் போட்டுட்டா மட்டும் ஜெயிச்சுட முடியாது.

இவ்வளவு சம்பாதிச்ச பின்னாடி இந்த வயசுல நான் அதிகாலையில எந்திரிச்சு பேக்கரிக்கு வர்றேன்னா அதுக்குக் காரணம் தொழிலை நேர்த்தியா பண்ணணும், மக்கள் நம்ம மேல வைச்சிருக்கிற நம்பிக்கையை இழந்துடக் கூடாதுன்ற பயம்தான். இந்த பயம் எல்லா முதலாளிகளுக்கும் எந்த நேரத்திலும் இருக்கணும். இன்னும் இங்கே நான் ஒரு தொழிலாளி தான்.


அதேமாதிரி, தொழிலாளிகளையும் பாதுகாக்கணும். எங்கக்கிட்ட 45 பேர் வேலை செய்யுறாங்க. இதுவரை இங்க வந்த யாருமே வேலையை விட்டுப் போனதில்லை. என்னோட தொழிலாளி ஒருத்தரோட பையன் டாக்டருக்குப் படிக்கிறான். இன்னும் சிலரோட புள்ளைங்க இன்ஜினீயரிங் படிக்கிறாங்க.
அவங்க படிப் புக்கான அத்தனை உதவிகளையும் நான் செய்யுறேன்.


36 பேருக்கு நாங்க பி.எஃப் பணம் கட்டிட்டு வர்றது அவங்களுக்கே தெரியாது. அவங்களோட சுக துக்கங்கள் அனைத்திலும் நானும் முதல் மனுசனா நிக்கிறேன். அவங்க நல்லா இருக்காங்க; என்னையும் நல்லா வைச்சிருக்காங்க. நல்லா வாழ்ந்துட்டோம்கிற திருப்தியோட இருக்கேன்’’ தனது வெற்றிக்கான சூட்சு மத்தைச் சொல்லி வியக்க வைக்கிறார் சின்னப்பா.